ஒப்பந்தத்தில் உறுதி (#11289)

நித்தியத்தின் மன்னரே, நாடுகளை உருவாக்குபவரே, அழியக்கூடிய ஒவ்வோர் எலும்பின்  வடிவமைப்பாளரே, நீர்  புகழப்படுவீராக! மனுக்குலம் முழுவதையும் உமது  மாட்சிமை மற்றும் பேரொளி எனும் தொடுவானத்திற்கு அழைத்து, உமது கிருபையும், தயையுமான அரசவையின்பால் உமது ஊழியர்களுக்கு வழிகாட்டிய உந்தன் திருநாமத்தினால், உம்மைத்  தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்துக் கொண்டோருள் ஒருவனாகவும், உம்மை  நோக்கித் திரும்பியுள்ளோரை,  உம்மால் ஆணையிடப்பட்ட துரதிர்ஷ்டங்களின் காரணமாக, உமது  பரிசுகளின் திசையை நோக்கித் திரும்புவதிலிருந்து பின்வாங்கிடாதவர்களுள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டமைக்காக  நான் உம்மைப் பிரார்த்திக்கின்றேன். 

என் பிரபுவே, உமது அருட்கொடை எனும் பிடியைப் பிடித்துக்கொண்டுள்ள நான், உமது  தயை எனும் மேலாடையின் விளிம்பினையும் இறுகப் பற்றிக்கொண்டுள்ளேன். அதனால், உம்மைத் தவிர மற்றனைத்து நினைவுகளிலிருந்தும் என்னைத்  தூய்மைப்- படுத்தக்கூடிவற்றை  உமது வள்ளன்மை எனும் மேகங்களிலிருந்து என் மீது பொழியச் செய்திடுவீராக; மேலும், உமது ஒப்பந்தத்தை மீறி, உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கையற்று, எவரை எதிர்த்து நிந்தனைச் செய்வோரின் சூழ்ச்சிகள் அணிவகுத்து நிற்கின்றனவோ, மனுக்குலம் முழுவதன் ஆராதனையின் இலக்காக விளங்கிடும் அவர்பால் என்னைத் திரும்பிடச் செய்வீராக.

என் பிரபுவே, உமது நாள்களில் உமது வஸ்திரத்தின் நறுமணங்களை எனக்களிக்க மறுத்திடாதீர்; மேலும் உமது வதனம் எனும் வெளிச்சத்தின் சுடரொளிகளின் தோற்றத்தால்  வெளிவந்த உமது திருவெளிப்பாட்டின் சுவாசங்களை எனக்குத் தராமல் தடுத்திடாதீர். நீர்  விரும்பியதைச் செய்வதில் நீரே சக்தி வாய்ந்தவர். உமது விருப்பத்தை எதிர்த்திடவோ, உமது  சக்தியால் நீர் கொண்டுள்ள நோக்கத்தினைத் தடுத்திடவோ எவற்றாலும் முடியாது. 

சர்வ வல்லவரும், சர்வ விவேகியுமான உம்மைத்  தவிர வேறு கடவுள் இலர்.

-Bahá'u'lláh
-----------------------

ஒப்பந்தத்தில் உறுதி (#11290)

வலிமை மிக்கவரும்,  மன்னிப்பவரும், கருணை மிக்கவரும் அவரே!

கடவுளே என் கடவுளே! நரகம், பிழை ஆகிய பாதாளத்தில் உமது ஊழியர்கள் இருப்பதை நீர்  காண்கின்றீர்; உலகின் ஆவலானவரே, தெய்வீக வழிகாட்டல் எனும் உமது ஒளி எங்கே?  உதவியற்ற, பலவீனமான அவர்களின் நிலையை நீர்  அறிவீர்; விண்ணுலக, மண்ணுலகச் சக்திகளைத் தன் பிடிக்குள் வைத்திருப்பவரே, உமது சக்தி எங்கே?

பிரபுவே எனதாண்டவரே, உமது அன்புக் கருணை எனும் ஒளிகளின் பிரகாசத்தினாலும், உமது அறிவு, விவேகம் எனும் சமுத்திரத்தின் பொங்கியெழுகின்ற அலைகளின் பெயராலும், உமது  இராஜ்யத்தின் மக்களைக் கவர்ந்திட்ட  உமது  புனித வார்த்தையினாலும், உமது திருநூலின் கட்டளைகளைப் பின்பற்றுபவர்களுள் ஒருவனாக நான் ஆவதை ஏற்குமாறு உம்மிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

உமது அருட்கொடை எனும் கோப்பையிலிருந்து தெய்வீக அகத்தூண்டல் எனும் மதுரசத்தினைப் பருகி, நீர் விரும்பியதைச் செய்திட விரைந்து, உமது திருவொப்பந்தத்தையும், சாசனத்தையும், கடைப்பிடித்தவர்களான உமது நம்பிக்கைக்குப் பாத்திரமானோருக்கு நீர் விதித்துள்ளவற்றை, எனக்கும் விதித்தருள்வீராக. நீர் விரும்பியதைச் செய்திட சக்தி படைத்தவர், நீரே ஆவீர். எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியுமானவரான உம்மைத்  தவிர வேறு கடவுள் இலர்.

பிரபுவே, மனிதர்கள் யாவருக்கும் பிரபுவானவர் நீரே.  உமது அருட்கொடையினால், இம்மையிலும் மறுமையிலும் என்னைச் செழிப்புறவும், உந்தன்பால் ஈர்த்திடவும் செய்பவற்றை எனக்கு விதித்தருள்வீராக. ஏகனானவரும், வலிமை-யானவரும், ஒளிமயமானவருமான உம்மைத் தவிர, கடவுள் வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

ஒப்பந்தத்தில் உறுதி (#11291)

பிரபுவே, உமது வழியில் எங்கள் அடிச்சுவடுகளை உறுதிப்படுத்தி, உமக்குக் கீழ்ப்படிதலில் எங்களின் உள்ளங்களைப் பலப்படுத்துவீராக. உமது ஒருமைத் தன்மை என்னும் அழகின்பால் எங்கள் வதனங்களைத் திரும்பச் செய்து உமது தெய்வீக ஒற்றுமை என்னும் அடையாளங்களினால் எங்களின் உள்ளங்களைக் களிப்படையச் செய்வீராக. உமது கடாட்சம் என்னும் ஆடையினால் எங்களின் அங்கங்களை அழகுபடுத்தி எங்களின் கண்களை மறைத்திருக்கும் பாவத்திரையை விலக்கி எங்களுக்கு உமது அருள் என்னும் கிண்ணத்தை அளிப்பீராக; அதனால் படைப்புயிர் அனைத்தின் சாரமும் உமது பேரொளி தோற்றத்தின் முன்னால் உமது புகழைப் பாடிடுமாக. பிரபுவே, உமது கருணைமிக்கத் திருவாக்கினாலும், உமது தெய்வீக மெய்ம்மை என்னும் மறைபொருளாலும், நீர், உம்மை வெளிப்படுத்துவீராக; அதனால், எழுத்துகளுக்கும் சொற்களுக்கும் மேலாக எழுந்து, முணுமுணுப்பையும் அசைவுகளையும் கடந்த பிரார்த்தனையின் தெய்வீகப் பேரானந்தம் எங்களின் ஆன்மாக்களை நிரப்பிடக்கூடும்—அதனால், உமது பேரழகின் வெளிப்பாட்டின் முன் பொருள்கள் அனைத்துமே வெறுமையுடன் இரண்டறக் கலக்கக் கூடும். 

பிரபுவே! இவர்கள்தாம் உமது ஒப்பந்தத்திலும் இறுதிப் பத்திரத்திலும் நிலையாகவும் திடமாகவும் இருந்து, உமது மார்க்கத்தில் உறுதி என்னும் கயிற்றை இறுகப் பிடித்து, உமது பேரொளி என்னும் அங்கியின் நுனியைப் பற்றிக் கொண்டுள்ள ஊழியர்கள். 

பிரபுவே, உமது அருளினால் அவர்களுக்கு உதவி புரிந்து, உமது சக்தியால் அவர்களை உறுதிப்படுத்தி, உமக்குக் கீழ்ப்படிய அவர்களின் இடையினை வலுப்படுத்துவீராக. 

மன்னிப்பவரும், அருள்பாலிப்பவரும் நீரே.

-`Abdu'l-Bahá
-----------------------

ஒப்பந்தத்தில் உறுதி (#11292)

பரிவிரக்கமுள்ள இறைவா! என்னை விழிப்பூட்டி உணர்வு பெறச் செய்தமைக்காக நன்றி கூறுகின்றேன். எனக்குக் காணும் கண்ணை அளித்துக் கேட்கும் செவியையும் அருளியுள்ளீர்; உமது இராஜ்யத்தின்பால் வழிநடத்தி என்னை உமது பாதைக்கும் வழிகாட்டியுள்ளீர். எனக்கு நேர்வழி காட்டி என்னை விடுதலை என்னும் கலத்தில் புகச் செய்திருக்கின்றீர். இறைவா! என்னை நிலையாகவும் அசைக்கவியலாத  நம்பிக்கை-யுடனும் இருக்கச் செய்வீராக. பெருஞ் சோதனைகளிலிருந்து என்னைக் காத்து, உமது ஒப்பந்தமும் இறுதிப் பத்திரமுமாகிய பலம் பொருந்திய கோட்டையில் என்னை வைத்துப் பாதுகாப்பீராக. நீரே செவிமடுப்பவர். 

இரக்கமுள்ள ஆண்டவனே! உமது அன்பெனும் ஒளியால் பிரகாசிக்கக் கூடிய கண்ணாடியைப் போன்ற உள்ளத்தை எனக்களித்து, உமது தெய்வீக அருளின் பொழிவினால் இவ்வுலகை ஒரு ரோஜாத் தோட்டமாக மாற்றவல்ல சிந்தனைகளை எனக்கு வழங்கிடுவீராக.

 நீரே இரக்கமுடையவர்; கருணை மிக்கவர்; மஹா கொடையாளரான இறைவனும் நீரே.

-`Abdu'l-Bahá
-----------------------

ஒப்பந்தத்தில் உறுதி (#11293)

என் பிரபுவே, என் நம்பிக்கையே! உமது அன்பர்களை உமது வலுமிகு ஒப்பந்தத்தில் உறுதியுடன் இருக்கவும், உமது தெளிவான சமயத்தின்பால் விசுவாசமுடன் இருக்கவும், பிரகாசங்கள் என்னும் திருநூலில் நீர் விதித்துள்ள கட்டளைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு உதவிடுவீராக; அதனால் அவர்கள் வழிகாட்டுதல் என்னும் விருதுக்கொடிகளாகவும், விண்ணுலகத் திருக் கூட்டத்தினரின் விளக்குகளாகவும், உமது முடிவில்லா மெய்யறிவு என்னும் ஊற்றுகளாகவும், தெய்வீக வானிலிருந்து ஒளிர்ந்தவாறு நேர்வழி காட்டிடும் விண்மீன்களாகவும் ஆகக் கூடும். 

மெய்யாகவே, நீரே வெற்றி கொண்டிட இயலாதவர், எல்லாம் வல்லவர், சர்வ சக்தி வாய்ந்தவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

